சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி

நரம்பு தளர்ச்சிக்கு நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது. நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.
சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி
Published on

மூளையில் இருந்து சமிக்ஞைகளை உடலின் ஒட்டுமொத்தப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது நரம்புகள்தான். ஒரு நரம்புக்குள்ளேயே மூன்று வகையான நரம்புப் பிரிவுகள் உள்ளன. அவை,

இயக்க நரம்புகள்:- மூளையில் இருந்து சமிக்ஞைகளை எடுத்துச்சென்று சதைகளை இயங்கச்செய்யும்.

உணர்ச்சி நரம்புகள்:- தோல், சவ்வு, மூட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உணர்வுகளை எடுத்துக்கொண்டு மூளைக்குச் செல்லும்.

தன்னியக்க நரம்புகள் : வியர்வைச் சுரப்பிகள், குடல் இயக்கங்கள், மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றம் ஆகிய முக்கிய செயல்களைச் செய்யும்.

இந்த நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி பற்றியும், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அறியலாம்.

நம் உடல் இயங்க ஆற்றல் தேவை. சில வேதியியல் மாற்றங்களால் நாம் உண்ணும் உணவில் இருந்து சர்க்கரை பிரித்து எடுக்கப்பட்டுப் பல நுண்ணிய மூலக்கூறுகளாகக் (குளுக்கோஸ், பரக்டோஸ், ேலக்டோஸ்) மாற்றப்பட்டுத் தேவையான ஆற்றல் உடலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல இந்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிகமாகும்போது நம் உடலுக்கு அது நச்சுப்பொருளாக மாறுகிறது. எனவே நம் உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

காலை வெறும் வயிற்றில் சரியான அளவு 100மிகி/டெசிலியும், நீரிழிவு நோயாளிகளுக்கு 126 மிகி/டெசிலி அளவும் இருக்கவேண்டும்.

உணவு உண்டு 2 மணி நேரத்தில் சரியான அளவு 160மிகி/டெசிலியும், நீரிழிவு நோயாளிகளுக்கு-200 மிகி/டெசிலி அளவும் இருக்கவேண்டும்.

இடைப்பட்ட அளவான 100-125mg/dl மற்றும் 160-199mg/dl உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ப்ரீ டையபடீஸ் என்கிறோம்.

அதிக ரத்த சர்க்கரையானது நம் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கக் கூடியது. இதனால் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் கண்களில் உள்ள விழித்திரை, மூளை, நரம்புகள், ரத்தக் குழாய்கள், இதயம், சிறுநீரகம் எனப் பல உறுப்புகளின் தன்மைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

25 வருடத்திற்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 50 சதவீதம் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்பட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படலாம்.

நரம்புத்தளர்ச்சியின் அறிகுறிகள்:

* நம் உடலிலேயே பாதத்தில் உள்ள நரம்புகள் தான் நீளமானவை. எனவேதான் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் முதலில் பாதத்தில் தொடங்குகிறது.

* காலில் எரிச்சல், கால் விரல் நுனிகளில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த உணர்வு சிலருக்கு இரண்டு பாதங்களிலும் தொடங்கி மேல் நோக்கித் தொடைப்பகுதி வரை வந்த பிறகு, கைகளுக்குப் பரவக்கூடும்.

* சிலருக்குப் பாதத்தில் மட்டும் உணர்ச்சி குறைந்து மதமதப்பு ஏற்படுகிறது. காலில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும். விரலில் உள்ள நகங்கள் பழுப்பு நிறமாக மாறி, பலமிழந்து உடையத் தொடங்கும். இவை அனைத்தும் படிப்படியாக வரக்கூடியவை.

* ஆனால் சிலருக்குத் திடீரென ஆரம்பித்து நடக்கக்கூட முடியாமல் போய்விடலாம். சிலருக்கு கைகளை ஊன்றி எழவோ, தோள்பட்டைக்கு மேல் கைகளைத் தூக்கவோ முடியாமல் போய்விடலாம். இதை அதிவிரைவான நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.

நாளுக்கு நாள் இந்திய தேசம் இனிப்பு தேசமாக மாறிக்கொண்டு வருகிறது. வீட்டிற்கொரு நீரிழிவு நோயாளி என்ற நிலையில் நம் சமுதாயம் போய்க்கொண்டிருக்கிறது.

இவர்களில் பலர் கால் மற்றும் பாதத்தைச் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிடுவதால் கால்களை அகற்ற வேண்டிய அபாயம் கூட ஏற்படலாம். எனவே அவர்கள் கால் பாதங்களைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

செய்ய வேண்டியவைகள்:

அன்றன்று தங்களது கால்களைக் கண்ணாடியில் பார்த்து அதில் கால் ஆணிகள், கட்டைவிரல் நகத்தில் பாதிப்பு, கால் எலும்புகளில் அதிகப்படியான வளர்ச்சி, வளைந்து காணப்படும் கால் கட்டைவிரல், வறண்ட சருமம், வெடிப்புகள், கால் விரல்களுக்கு இடையில் சிரங்குகள் போன்றவை உள்ளனவா என ஆய்ந்தறிய வேண்டும்.

* கால்களையும், விரல்களையும் மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும்.

* கால் நகங்களை நேராக வெட்ட வேண்டும்.

* காலணிகளை அணியாமல் வெறும் கால்களுடன் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* காலுக்குப் பொருத்தமான காலணிகளையே அணிய வேண்டும்.

* கால்களை ஈரப்பதமாக வைக்கத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை:

* செருப்பில்லாமல் நடக்க வேண்டாம்.

* சூடான நீரில் பாதங்களை வைக்க வேண்டாம்.

* கால் ஆணிகளை நீக்கும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.

* கால் ஆணிகளைத் தாமே வெட்டிக் கொள்ள வேண்டாம்.

* பாதம் தொடர்பான சிக்கல்களுக்குத் தமக்குத் தாமே மருத்துவம் செய்ய வேண்டாம்.

* புகையிலை மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

* மதுப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

* மண், விபூதி, சுண்ணாம்பு, சாம்பல், சாணம், கரித்தூள் ஆகியவற்றைப் பாதங்களில் உள்ள காயங்களின் மேல் தடவக்கூடாது.

* இறுக்கமான உள்ளாடைகள் அல்லது இறுக்கமான துணிக்கட்டுகளைத் (Bandage) தவிர்க்க வேண்டும்.

* காலில் கொப்புளம் ஏற்பட்டால் முள், ஊசி கொண்டு குத்த வேண்டாம்.

* அதிக நேரம் கால்மேல் கால்போட்டு உட்கார வேண்டாம், ஏனெனில் இதனால் கால் பாதங்களுக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும்.

* கத்தி, பிளேடு, கத்தரிக்கோல், ஆணித் துண்டு, சிகரெட் அல்லது பீடி போன்றவற்றால் பாதத்தில் காயம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

* அசிடிக் அமிலம், கார்போலிக் அமிலம், அயோடின் அல்லது அயோடெக்ஸ் ஆகியவற்றைப் பாதங்களில் தடவ வேண்டாம்.

இப்படிச் செய்வதால் கால்களில் ஏற்படும் பலசிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இவற்றுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

சிலருக்கு உணவுக் கட்டுப்பாடு மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை.

தமது சர்க்கரையின் அளவைப் பிறரின் அளவுகளோடு ஒப்பிட்டு, அவர்கள் கூறுவதை வைத்து முடிவு செய்யக் கூடாது. சிலர் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான செய்திகளை உண்மை என்று நம்பி, மாத்திரைகளை நிறுத்திவிட்டுப் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த தவற்றை யாரும் செய்து விடாதீர்கள். எனவே அவரவர் உடலுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் விதையுள்ள திராட்சை, விட்டமின் "சி" அதிகமுள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியைத் தடுக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com