

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச, ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு பணமோசடி வழக்குகளில் சிக்கியுள்ள இவர், பிணையில் வெளியே இருந்தநிலையில் தற்போது கைது செய்யப்பட்டார்.
38 வயதான யோஷித ராஜபக்ச, தான் கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், பிரிட்டிஷ் ராயல் கடற்படைக் கல்லூரி பயிற்சிக்காக அரசு நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
“தேவையான தகுதிகள் இன்றி பணியில் சேர்க்கப்பட்டது மற்றும் அதைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பயிற்சிக்காக அரசு நிதியைப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்’ என லஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு பிணை (ஜாமின்) வழங்கி உத்தரவிட்டுள்ளது.