என்ன நடந்தாலும், மக்களுக்காக நான் திரும்புவேன் - ஷேக் ஹசீனா

நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.
Sheikh Hasina
Published on

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று (புதன்கிழமை) காணொளி வாயிலாக ஆற்றிய உரையில், தான் வங்கதேசத்திற்கு திரும்புவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் அது ஒரு பொருட்டல்ல என்றும் கூறினார்.

தனது இந்த திரும்புதல் அதிகாரத்தை கோருவதற்காக அல்ல என்றும், மாறாக நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்," என்று மேலும் கூறினார்.

காணொளிக் காட்சி மூலம் பேசிய அவர், மக்கள் "மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும்", அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்ததாக ஊடகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

வெற்றி மாதம்:

"டிசம்பர் எங்கள் வெற்றி மாதம். அதனால், நான் டிசம்பர் மாதத்தில் திரும்பி செல்ல விரும்புகிறேன். நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.

தற்போதைய நெருக்கடி குறித்துப் பேசுவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், முக்கிய தேசிய தலைவர்களுக்கும், நமது விடுதலைப் போரின் முப்பது லட்சம் தியாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

மேலும், 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நான் இழந்த எனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூர்கிறேன்," என்று அவர் கூறினார்.

பிரிக்கப்படவில்லை:

அந்த உரையில், இராணுவ புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் பற்றிப் பேசும்போது, ​​அவர் கண்ணீர் விட்டு அழுதார். தன் நாட்டிலிருந்து தான் "வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோதிலும்", தன் மக்களிடமிருந்து "ஒருபோதும் பிரிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

தெற்காசியாவின் வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் (FCC) ஏற்பாடு செய்திருந்த தனது உரையில், ஜனநாயகத்திற்கான தனது நாட்டின் 'போராட்டத்திற்கு' சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com