வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!

ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Venizula Earthquake
Published on

வெனிசுலா நாட்டை உலுக்கிய விபரீதமான இரட்டை நிலநடுக்கப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இது வெனிசுலா வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத மிக மோசமான இயற்கை அழிவாகக் கருதப்படுகிறது.

39 வினாடிகளில் நிகழ்ந்த கோரம்:

கடந்த 24 ஆம் தேதி வெனிசுலாவில் அடுத்தடுத்து 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

வெறும் 39 வினாடிகள் என்ற மிகக் குறுகிய கால இடைவெளியில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட இந்த பயங்கர அதிர்வுகள், ஒட்டுமொத்த நகரங்களையும் நிலைகுலையச் செய்தன.

சீட்டுக்கட்டாய் சரிந்த கட்டிடங்கள்:

நிலநடுக்கத்தின் வீரியம் தாங்காமல் பல அடுக்கு வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டுபோல மொத்தமாகச் சரிந்து தரைமட்டமாகின.

நில அதிர்வின் கோரத்தால் பிரதான நெடுஞ்சாலைகள் அனைத்தும் இரண்டு, மூன்று துண்டுகளாகப் பிளந்து உள்வாங்கின. இதனால் அத்தியாவசியப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மேலும், மலைப்பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டு, ஒட்டுமொத்த கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

உயிரிழப்பு 5 ஆயிரத்தைக் கடந்தது:

பாதிக்கப்பட்ட நகரங்களில் ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ராட்சத இயந்திரங்கள் மூலம் சிதைந்த கட்டிடங்களை அகற்றி வரும் நிலையில், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற சபாநாயகர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நிலநடுக்கத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 5,119 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இடிபாடுகளுக்கு இடையே காயங்களுடன் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com