ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்

டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன
ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்
Published on

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது .

அமெரிக்க மத்திய நேரப்படி இரவு 8 மணி (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) முதல் ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தொடங்கியதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகமான சென்ட்காம் அறிவித்துள்ளது.

தாக்குதல்

அமெரிக்கத் தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் தெற்குப் பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் 3 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷெர் உட்பட தெற்கு ஈரானின் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

டிரம்ப் எச்சரிக்கை

முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரானின் புரட்சிகரப் படை ஏவுகணைகளை வீசியது. அவை அனைத்தையும் அமெரிக்கக் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன.

இதுகுறித்து நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இப்போது எங்கள் முறை, அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்திருந்தார்.

டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த வாரம் நிறுத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது பேசுபொருளாகி உள்ளது.

ஈராக்

முன்னதாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது 30க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com