உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்.. 2 இந்தியர்கள் மாயம் - கருங்கடலில் தொடரும் பதற்றம்

கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
representational image
representational image
Published on

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் 4 இந்திய மாலுமிகள் இருந்த வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கீவ்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்கப்பட்ட கப்பலில் இருந்தும் 4 இந்தியர்களில் இருவர் பத்திரமாக உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமிருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட தூதரகத்தின் அறிக்கையின்படி, எம்வி ஏஜிஎன் என்ற அந்த கப்பல் நேற்று ஒடெசா துறைமுகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர் தாக்குதல்

கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக ஒடெசா துறைமுகம் விளங்குகிறது.

2022 முதல் ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் அண்மையில் ஒடெசா துறைமுகத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

4 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, இந்தியாவில் உள்ள ரஷிய தூதருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் சில நாட்கள் இடைவெளியில் மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை

தொடரும் தாக்குதல்களை அடுத்து, மத்திய அரசு, கருங்கடல் வெளியே செல்லும் கப்பல்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த கடற்பகுதியில் மிஸைல், டிரோன் தாக்குதல் உள்ளிட்டவற்றில் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு வர்த்தக கப்பல்களுக்கு அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவ்வழியே செல்லும் கப்பல்களில் பணியாற்றும் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

கப்பலில் பணியமர்த்தியவர்களிடமும், வேலைவாய்ப்பு ஏஜன்சிகளிடமும், கப்பல்களை இயக்குபவர்களிடமும் இருந்து கப்பல் செல்லும் பாதை குறித்தும், சென்றடையும் துறைமுகங்கள், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்சூரன்ஸ் கவரேஜ், அவசரகால நடைமுறைகள் என அனைத்தையும் குறித்து தெளிவான தகவலை கேட்டறிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது

உதவி எண்

மேலும் உதவி தேவைப்படும் இந்தியர்கள், ரஷியாவில் உள்ள இந்திய தூதரக எண்: +7 9652773414 மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரக எண் +38 0933559958 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com