

பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்தவும் 'பிறப்புச் சுற்றுலா'வை (birth tourism) தடுக்கவும் குடியேற்றம் தொடர்பான இரண்டு நடவடிக்கைகளில் டிரம்ப் கையெழுத்திட்டார்
அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும் உரிமையை (பிறப்புரிமை குடியுரிமை) கட்டுப்படுத்துவதற்கான தனது முதல் முயற்சியை உச்ச நீதிமன்றம் நிராகரித்த பின்னரும், மீண்டும் ஒருமுறை அதை செயல்படுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் தயாராகி வருகிறார். இதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவித்தார்.
குடியேற்றம் தொடர்பான இரண்டு நிர்வாக உத்தரவுகளில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, அமெரிக்காவில் பிறந்த பிறகு அந்நாட்டுக்குக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
இரண்டாவது உத்தரவானது, அமெரிக்காவிற்கு வந்து அங்கு குழந்தையை பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோரும் சுற்றுலா பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதன் மூலம், டிரம்ப் "பிறப்பு சுற்றுலா" என்று அழைக்கும் நடைமுறையைக் கட்டுப்படுத்த முயல்கிறது.
இதுகுறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அதிபர் டிரம்ப், "குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு தீர்ப்பு கிடைத்தது. அதனால் நாங்கள் சில மாற்றங்களை செய்து வருகிறோம்.
நாங்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இது எங்களை இன்னும் வலுவான முறையில் செயல்பட அனுமதிக்கும். அவர்கள் பிறப்புரிமை குடியுரிமை முறையை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள்," என்று குறிப்பிட்டார்.
இது குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், தனது இந்த சமீபத்திய நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடிமக்கள் அல்ல என்று அறிவிக்க டிரம்ப் மேற்கொண்ட முந்தைய முயற்சிகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதேவேளையில், பிறப்புரிமை குடியுரிமை குறித்த பரந்த கண்ணோட்டத்தை ஜூன் மாதத்தில் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.