டொனால்ட் டிரம்ப் வருகையால் ஸ்தம்பித்த நியூயார்க்: மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ரசிகர்கள் கூச்சல்!..

அதிபர் வருகை குறித்து நிக்ஸ் அணி வீரர் மிட்செல் ராபின்சன் அதிரடி பதில்!
Donald Trump, Kai Trump
Donald Trump, Kai Trump
Published on

மன்ஹாட்டன் நகரின் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 NBA ஃபைனல்ஸின் 3-வது ஆட்டம், அரசியல் மற்றும் விளையாட்டு உலகினரின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூயார்க் நிக்ஸ் மற்றும் சான் ஆண்டோனியோ ஸ்பர்ஸ் அணிகள் மோதிய இப்போட்டியை நேரில் காண அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தார்.

பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபர், NBA ஃபைனல்ஸ் வரலாற்றிலேயே போட்டியை நேரில் காண்பது முதல் முறையாகும்.

எனினும், அவரது வருகை மைதானத்திற்குள்ளும் வெளியேயும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மைதானத்தின் வீடியோ திரையில் அதிபர் டிரம்ப் சல்யூட் அடிக்கும் காட்சி காண்பிக்கப்பட்டது.

அப்போது மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் ஒரு பகுதியினர் பலத்த கூச்சலிட்டு தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அதே நேரத்தில், அவரது ஆதரவாளர்கள் கைதட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு திரையில் அமெரிக்கக் கொடி தோன்றிய போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுப்பிய ஆரவாரம் எதிர்ப்புக் குரல்களை அடக்கியது.

டிரம்ப் இந்த ஆட்டத்தை நியூயார்க் நிக்ஸ் அணியின் உரிமையாளர் ஜேம்ஸ் டோலனின் சிறப்புப் பெட்டியில் அமர்ந்து, அவரது பேத்தி காய் டிரம்ப் மற்றும் உள்துறை செயலாளர் டக் பர்கம் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

டிரம்ப் வருகையால் மேடிசன் ஸ்கொயர் கார்டனை சுற்றி போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற யூ.எஸ். ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியின் போதும் டிரம்பின் வருகையால் இதேபோன்ற பாதுகாப்பு கெடுபிடிகள் ரசிகர்களைச் சோதித்தது குறிப்பிடத்தக்கது.

அதிபர் டிரம்பின் வருகை மற்றும் அதனால் ஏற்பட்ட சலசலப்புகள் குறித்துப் போட்டியின் பின் செய்தியாளர்கள் கேட்டபோது, நிக்ஸ் அணியின் நட்சத்திர சென்டர் வீரர் மிட்செல் ராபின்சன் மிகவும் சாதாரணமாகப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "யார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் மைதானத்தில் இறங்கி எங்களுடைய ஆட்டத்தை மட்டுமே விளையாடுவோம்," என்று எதார்த்தமாகக் கூறி அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com