நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை

தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.அடுத்தடுத்து வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை
Published on

சியோல்:

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி மிரட்டல் விடுத்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய 2 ஏவுகணை சோதனை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று வடகொரியா கிழக்கு கடற்கரை நகரமான சின்போவில் இருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகளை வீசியதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணைகள் வடகொரியா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் குறிப்பிட்ட இலக்கினை வெற்றிகரமாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனையின் போது சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை அவர்கள் மிகப்பெரிய அளவிலான கூட்டு பயிற்சி மேற்கொள்ள இருந்தனர்.

இந்த பயிற்சி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வடகொரியா நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com