சோமாலியாவில் ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்- 40 பொதுமக்கள் பலி

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோமாலியாவில் ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்- 40 பொதுமக்கள் பலி
Published on

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல்- ஷபாப் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. அல்-கொய்தா ஆதரவு பெற்ற இந்த இயக்கம் ராணுவ வீரர்கள், போலீசார், பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களை ஓட்டலின் நுழைவு வாயிலில் மோத செய்து வெடிக்க வைத்தனர். பின்னர் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபடி ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர்.

உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். ஓட்டலில் பால்கனியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். ஓட்டலுக்குள் சிக்கியுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரு தரப்பினருக்கு இடையே நேற்று முழுவதும் சண்டை நீடித்தது.

ஓட்டலுக்குள் பாதுகாப்பு படையினர் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டனர். இதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பணய கைதிகள் மீட்கப்பட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. இச்சண்டை சுமார் 30 மணி நேரம் நீடித்தது. இதுகுறித்து ராணுவ கமாண்டர் ஒருவர் கூறும்போது, ஓட்டலுக்குள் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓட்டலில் இருந்து கடந்த சில மணி நேரங்களாக துப்பாக்கி சூடு எதுவும் நடக்கவில்லை' என்றார். தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை மற்றும் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அவர் தெரிவிக்க வில்லை.

ஓட்டலுக்குள் வெடி பொருட்களை தீவிரவாதி கள் மறைத்து வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதால் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

ஓட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்ததும் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் ஓட்டல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இன்னும் சிலர் கழிவறையில் பதுங்கி கொண்டனர்.

ஓட்டலுக்குள் சென்ற பாதுகாப்பு படையினர் கழிவறையில் மறைந்திருந்த குழந்தைகள், பெண்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com