உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!

கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீ விபத்துகளில் சிக்கியும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
RussiaUkraineWar
Published on

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து இன்று அதிகாலை ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கர ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

நேற்று முன் தினம் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் இந்த வான்வழித் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இன்று நடந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கீவ் தாக்குதல்

இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சொலோமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஏவுகணை வீச்சில் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் அக்கட்டிடத்தின் முன்பகுதியில் பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமாகின.

அதேபோல் டார்னிட்ஸ்கி பகுதியில் உள்ள வணிகக் கிடங்கு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்

ரஷ்யாவின் இந்த அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இதுவரை 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீ விபத்துகளில் சிக்கியும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com