ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தீவிர டிரோன் தாக்குதல்: 8 பேர் பலி

இங்குள்ள ராணுவ விமானதளம் மற்றும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
DRONE ATTACK
Published on

ரஷ்யாவின் பல பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஒரே இரவில் நடத்திய தீவிரமான டிரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அதேவேளையில், தங்கள் நாட்டு வான்வழிப் பகுதியை நோக்கி வந்த 635 உக்ரேனிய டிரோன்களை வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் அருகே உக்ரேனிய டிரோன் விழுந்து வெடித்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். மற்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் மேலும் 3 பேர் பலியாகினர். இதனைதொடர்ந்து, எங்கெல்ஸ் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது டிரோன் விழுந்து தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

இங்குள்ள ராணுவ விமானதளம் மற்றும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. உட்முர்டியா பகுதியில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தொழில்துறை மையமான உஃபா நகரில் டிரோன் வீழ்த்தப்பட்டதால் பெருந்தீ விபத்து ஏற்பட்டது.

வணிக மையங்கள் மீது தாக்குதல்:

ரஷ்யாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான 'வில்ட்பெர்ரிஸ்' நிறுவனத்தின் கிடங்குகளை உக்ரைன் டிரோன்கள் தாக்கியுள்ளன. ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் விநியோகச் சங்கிலியையும் முடக்கும் உத்தியாக உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் பதில் தாக்குதல்:

உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷ்ய படைகளும் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல்களை நடத்தியுள்ளன. ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரு கப்பல்கள் மற்றும் கருங்கடல் பகுதியில் சென்ற மற்றொரு விநியோகக் கப்பல் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி அழித்தன. தென்கிழக்கு உக்ரைனின் முக்கியமான நகரமான ஸபோரிழியா மீது ரஷ்யா வீசிய குண்டுகளால் ஒருவர் உயிரிழந்தார். 21 பேர் காயமடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com