கனடாவை சேர்ந்த அறிஞருக்கு கணிதத்தின் உயரிய பீல்ட்ஸ் விருது

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான ஆண்ட்ரே-ஊர்ட் யூகம் என்ற விதியை முழுமையாக நிரூபித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
Jacob Tsimerman
ஜேக்கப் சிமர்மேன்
Published on

பல ஆண்டுகளாகக் கணிதவியலாளர்களை திணறடித்து வந்த ஒரு சிக்கலுக்குத் தீர்வு கண்டதற்காக டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேக்கப் சிமர்மேனுக்கு கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும் பீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜேக்கப் சிமர்மேன் எண் கோட்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கணிதப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரபல கனடிய கணிதவியலாளர் ஆவார். இவர் தற்போதைய தலைமுறையின் மிகச்சிறந்த எண் கோட்பாட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ஆண்ட்ரே-ஊர்ட் யூகம்

கணித உலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான ஆண்ட்ரே-ஊர்ட் யூகம் என்ற விதியை முழுமையாக நிரூபித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கனடா நாட்டின் கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி, இந்த உயரிய விருதைப் பெறும் முதல் கணிதவியலாளர் ஜேக்கப் சிமர்மேன் ஆவார்.

16 வயதில் தனது படிப்பைத் தொடங்கி, வெறும் 2 ஆண்டுகளில் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஜேக்கப் சிமர்மேன் இந்த விருதை பெறும் 2-வது கனடியர் ஆவார்.

கணிதத்திற்கான நோபல் பரிசு பீல்ட்ஸ்

பீல்ட்ஸ் விருதானது, சர்வதேச கணித ஒன்றியத்தால் ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒருமுறை 40 வயதுக்குட்பட்ட 4 கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருது, டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பயின்று கற்பித்தவருமான கனடிய கணிதவியலாளர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. டொராண்டோவில் நடைபெறும் விழாவில் ஜேக்கப் சிமர்மேனுக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.

கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படும் இந்த விருது 1932-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com