வடக்கு மாசிடோனியாவிற்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் முர்மு

இந்தியா-வடக்கு மாசிடோனியா வர்த்தக மன்றத்தில் முர்மு உரையாற்ற உள்ளார்.
குடியரசுத் தலைவர் முர்மு - கோப்புப்படம்
Published on

ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வடக்கு மாசிடோனியாவிற்கு வந்துள்ளார்.

வடக்கு மாசிடோனியாவிற்கு வருகை தரும் முதல் இந்திய குடியரசு தலைவர் இவர் ஆவார்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள, கடல் எல்லை இல்லாத நாடான இங்கு, இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், குடியரசு தலைவர் முர்மு அந்நாட்டு அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

நாடாளுமன்ற உரை:

மேலும், அவர் பிரதமர் ஹிரிஸ்டிஜன் மிக்கோஸ்கி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் அஃப்ரிம் காஷி ஆகியோரை சந்திப்பதோடு, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார். இந்தியா-வடக்கு மாசிடோனியா வர்த்தக மன்றத்திலும் முர்மு உரையாற்ற உள்ளார்.

வேளாண்மை, மருந்துகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் போன்ற முன்னுரிமைத் துறைகளில் பொருளாதார உறவுகளை ஆழமாக்குவதில் இரு தரப்பினரும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.

அன்னை தெரசா நினைவிடம்:

குடியரசுத் தலைவர் முர்மு, அன்னை தெரசா நினைவிடத்தையும் பார்வையிடுவார். அன்னை தெரசா 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி, வடக்கு மாசிடோனியாவின் தற்போதைய தலைநகரான ஸ்கோப்ஜேவில் பிறந்தார். 1928-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள 'சிஸ்டர்ஸ் ஆஃப் லொரெட்டோ' (Sisters of Loreto) அமைப்பில் இணைவதற்காக அங்கிருந்து புறப்படும் வரை அவர் ஸ்கோப்ஜேவிலேயே வசித்து வந்தார்; அதன்பிறகு அவர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, அதிபர் நிகுசோர் டானின் அழைப்பின் பேரில் ஜூலை 23 முதல் 25 வரை முர்மு ருமேனியாவிற்குப் பயணம் மேற்கொள்வார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் ருமேனியாவுக்கு இந்திய குடியரசு தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாக அமையும்.

முக்கியத்துவம்:

இந்த மூன்று நாடுகளுக்கான அரசுமுறை பயணம், அந்நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பரந்த கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துடன் மத்திய அரசு கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய '3T'-களில் கவனம் செலுத்துவதே இந்த பயணத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சி.பி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com