பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

"மக்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் விட்டுச் செல்லும் பொருட்களை விட உங்கள் உயிரே முதன்மையானது. அரசு அமைப்புகள் அனைத்தும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்க உத்தரவிடப்பட்டுள்ளது."
Powerful earthquake shakes the Philippines: Death toll rises to 15, 129 people injured.
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவோ தீவு அருகே இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் சிவில் பாதுகாப்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 130ம் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 12 பேர் 'சொக்ஸ்கார்ஜென்' பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெயியாகியுள்ளது.

தொடர் நில அதிர்வுகள்:

முதன்மை நிலநடுக்கத்திற்குப் பிறகு, ரிக்டர் அளவில் 1.3 முதல் 6.7 வரை வீரியம் கொண்ட 138 தொடர் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜெனரல் சாண்டோஸ் நகரத்துக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஜெனரல் சாண்டோஸ் சிட்டி , தெற்கு கொட்டபாட்டோ, சுல்தான் குடாரத் மற்றும் சரங்கனி ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு தொடங்கும் முதல் நாளான இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பள்ளிகளில் இருந்த குழந்தைகள் பெரும் அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உள்ளாகினர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெனரல் சாண்டோஸ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது.

கட்டிடங்கள் சேதம்:

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஜெனரல் சாண்டோஸ் நகரில் உள்ள பிரபலமான 'ஜோலிபி' உணவகக் கட்டிடம் உட்பட வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என 24-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. சில வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களின் பகுதிகள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் கட்டிடங்கள் குலுங்குவதும், சுவர்கள் இடிந்து விழுவதும், மக்கள் அச்சத்தில் வெளியே ஓடுவதும் பதிவாகி நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.

சுனாமி எச்சரிக்கை:

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பலாவு மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி பகுதிகளிலும் சிறிய கடல் அலை மாற்றங்கள் கண்டறியப்பட்டன. மிண்டனாவோவின் தெற்கு கடற்கரையை ஒட்டிய 6 பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக 1.4 மீட்டர் (4.6 அடி) உயரத்திற்கு அலைகள் பதிவாகியுள்ளது.

உயர்தர எச்சரிக்கை:

"மக்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் விட்டுச் செல்லும் பொருட்களை விட உங்கள் உயிரே முதன்மையானது. அரசு அமைப்புகள் அனைத்தும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்க உத்தரவிடப்பட்டுள்ளது." என்று பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் தங்களை "உயர்தர எச்சரிக்கை நிலைக்கு" மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் சேதமடைந்த வீடுகளுக்குள் மக்கள் தற்போதைக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com