பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு-சுனாமி எச்சரிக்கை வெளியீடு

"பிலிப்பைன்ஸ், பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" எனப்படும் நில அதிர்வு வளையப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலைச் செயல்பாடுகளும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது"
Powerful Earthquake in the Philippines
Published on

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவோ தீவு அருகே, இன்று காலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜெனரல் சாண்டோஸ் நகரத்துக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களின் பகுதிகள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் கட்டிடங்கள் குலுங்குவதும், சுவர்கள் இடிந்து விழுவதும், மக்கள் அச்சத்தில் வெளியே ஓடுவதும் பதிவாகி நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. இந்த பேரிடரில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் பதிவாகியுள்ள நிலையில், சில கடலோரங்களில் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

நிலநடுக்கத்தால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெனரல் சாண்டோஸ் சர்வதேச விமான நிலையத்தில் சேதம் ஏற்பட்டதால் பல விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்னன்ட் மார்க்கோஸ், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ், பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" எனப்படும் நில அதிர்வு வளையப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலைச் செயல்பாடுகளும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com