

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் அரசியல் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அதிபர் பஸ்ஸிரோ டியோமயே ஃபே தனது முன்னாள் அரசியல் வழிகாட்டியும் முன்னாள் பிரதமருமான உஸ்மான் சோன்கோவை பதவியில் இருந்து நீக்கியதையடுத்து புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நிர்வாகக் கொள்கைகள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சோன்கோ மற்றும் முழு அமைச்சரவையும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அதிபர் ஃபயே திங்கள்கிழமை தொலைக்காட்சி நேரலை மூலம் புதிய அமைச்சரவையை வெளியிட்டார்.
புதிய பிரதமராக மூத்த பொருளாதார நிபுணர் அஹ்மது அல்-அமினு லோ நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் திறன் அவருக்கு இருப்பதாக அதிபர் ஃபயே தெரிவித்தார். இதற்கிடையில், சோன்கோ தலைமையிலான பாஸ்டெஃப் கட்சி புதிய அரசாங்கத்தில் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது. அதிபர் ஃபயேவுடன் நடைபெற்ற நீண்ட ஆலோசனையில் சில முக்கிய கருத்து வேறுபாடுகள் நீடித்ததால், அமைச்சரவையில் தங்களது பிரதிநிதிகள் இடம்பெறமாட்டார்கள் என சோன்கோ தெரிவித்துள்ளார். இருப்பினும், புதிய அமைச்சரவையில் பாஸ்டெஃப் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், முந்தைய அரசில் முக்கிய பொறுப்பில் இருந்த பல மூத்த தலைவர்கள் இதில் இடம் பெறவில்லை.
கடந்த 2024ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே ஃபயே, சோன்கோவை பிரதமராக நியமித்திருந்தார். அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சோன்கோவின் ஆதரவுடன் ஃபயே வெற்றி பெற்றார். ஆனால். சமீப காலமாக இருவருக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. ஜூலை மாதத்தில், ஃபயே தலைமையில் "தலைமைத்துவ தோல்வி" இருப்பதாக சோன்கோ வெளிப்படையாக விமர்சித்தார். அதேபோல், மே மாதத்தில் கட்சி ஒரே நபரை மையமாகக் கொண்டு இயங்கக் கூடாது என அதிபர் ஃபயே மறைமுகமாக சோன்கோவை சாடியிருந்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஃபயே தயாராக உள்ள நிலையில், சோன்கோ தேசிய சுயாட்சி அடிப்படையிலான பொருளாதார அணுகுமுறையை வலியுறுத்தி வந்தார். செனகல் நாடாளுமன்றத்தில் 165 இடங்களில் 130 இடங்களை பாஸ்டெஃப் கட்சி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், இந்த அரசியல் மோதல் நாட்டின் எதிர்கால ஆட்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.