

லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்தபோது, ஒரு வணிக விமானத்தின் விமானி மர்மமான தட்டு வடிவ பொருள் ஒன்றைக் கண்டதை கூறியதாக மெட்ரோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிக்கை ஒன்றின்படி, இந்த சம்பவத்தில் ஏர்பஸ் A319 ரக பயணிகள் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது.
விமானம் கீழ் இறங்கி, ஓடுபாதையை நோக்கி இடதுபுறமாகத் திரும்பிக்கொண்டிருந்தபோது, 'பறக்கும் தட்டு' அல்லது ஒரு தனித்துவமான ட்ரோன் போன்ற பொருள் ஒன்று வலது இறக்கைக்கு மிக அருகில் அபாயகரமாக கடந்து செல்வதை விமானி கவனித்துள்ளார்.
அந்த மர்ம பொருள், விமானத்தில் இருந்து சுமார் 100 முதல் 300 அடி தொலைவில், அதே உயரத்திலும் எதிர் திசையிலும் பயணித்து கொண்டிருந்தது. விமான போக்குவரத்தில் ஏற்படும் நூலிழை தவறல்களை கண்காணிக்கும் ஒரு சுதந்திர அமைப்பான யு.கே. ஏர்பிராக்ஸ் போர்டு, இந்த நிகழ்வை முழுமையாக விசாரித்தது.
"ஏ319 விமானி கீழே இறங்கி, இடதுபுறம் திரும்பியபோது, தட்டு அல்லது 'பறக்கும் சாஸர்' வகையை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு ட்ரோன், அவருக்கு மிக அருகில் எதிர் திசையில், அதே மட்டத்தில், அவரது வலது இறக்கையை கடந்து பறந்ததாக விமானி தெரிவித்தார்," என்று ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இங்கிலாந்து ஏர்பிராக்ஸ் வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது.
கேட்விக்குக்கு தெற்கே சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள ஹேங்க்ராஸ் என்ற கிராமத்திற்கு அருகே, சசெக்ஸ் கிராமப்புறத்தின் மீது அந்த பொருள் வட்டமிட்டு கொண்டிருந்ததாக விமானி குறிப்பிட்டார்.
விமானி அந்த விண்கலத்தை, அதன் வெளி விளிம்பில் அடர் நிற குறிகளை கொண்ட ஒரு தனித்துவமான தட்டு என்று விவரித்தார். அது ஒரு மேம்பட்ட அல்லது அசாதாரணமான ட்ரோனாக இருக்கலாம் என்று விமான குழுவினர் சந்தேகித்தபோதிலும், அதன் சரியான அடையாளத்தையோ அல்லது அது தோன்றிய இடத்தையோ அவர்களால் சரிபார்க்க முடியவில்லை.
விமானம் மிக அருகில் இருந்தபோதிலும், விமானி அவசரகால தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை, ஏனெனில் அந்த விமானம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருப்பத்தின் நடுவில் இருந்தது.
"அந்தப் பொருள், விளிம்பில் அடர் நிறக் கோடுகளுடன் கூடிய ஒரு தட்டு போல தெரிந்தது; அது ஒரு ட்ரோனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியவில்லை," என்று அதன் மாதாந்திர கூட்ட அறிக்கை கூறியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. "அது விமானத்திற்கு மிக அருகில் இருந்தது, ஆனால் அவர்கள் ஏற்கனவே திரும்பி கொண்டிருந்ததால், எந்த தற்காப்பு நடவடிக்கையும் தேவைப்படவில்லை."