பிலிப்பைன்ஸ் நிலநடுக்கக் கொடூரம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

200-க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள்.. வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!
Philippines Earthquake
Philippines Earthquake
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளதால் உள்ளூர் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

நிலநடுக்கத்தின் வீரியத்தால் மிண்டானோ தீவின் கடலோரப் பகுதிகளில் 1 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் சீறிப் பாய்ந்து ஊருக்குள் புகுந்தன.

இதனால் கடலோரக் கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

முதல் பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்தப் பிராந்தியம் முழுவதும் ரிக்டர் அளவில் 7.0 மற்றும் 6.7 என்ற வீரியத்தில் 200-க்கும் மேற்பட்ட தொடர் நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.

இதனால் பயந்துபோன லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் திறந்தவெளி மைதானங்களிலும், தெருக்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், சரிந்து விழுந்த பிரம்மாண்ட வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com