ஹார்முஸ் அருகே கப்பல் மீது தாக்குதல்.. 3 இந்தியர்கள் மாயம் - இந்தியா கண்டனம் - அமெரிக்க தூதருக்கு சம்மன்

இத்தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கப்பல்
கப்பல்
Published on

பலாவு நாட்டு கொடியுடன் ஓமனின் சோஹர் துறைமுகத்திற்கு 20 கடல் மைல் தொலைவில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே சென்று கொண்டிருந்த செட்டபெல்லோ என்ற டாங்கர் கப்பல் நேற்று முன் தினம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த தாக்குதல் அமெரிக்க கடற்படையால் நிகழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஏவுகணையானது கப்பலின் என்ஜின் அறையைத் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்தின் போது கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 24 பேர் இந்தியர்கள் ஆவர்.

கப்பல் அபாய சிக்னலை அனுப்பியதை அடுத்து, ஓமன் நாட்டு கடற்படையும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

அமெரிக்கா விதித்துள்ள ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை மீறி, இக்கப்பல் ஈரானிய துறைமுகத்திற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கப் படைகளின் எச்சரிக்கைகளையும் உத்தரவுகளையும் கப்பல் நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்ததால், அமெரிக்க விமானப்படைப் பிரிவு கப்பலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மேலும் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தற்காலிகத் தூதர் ஜேசன் மீக்ஸ்க்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று கடுமையான கண்டனம் தெரிவித்தது.

வெளியுறவுத்துறை அமைச்சகம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஓமன் கடற்பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது.

கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; 3 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மஸ்கட்டில் உள்ள எங்கள் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.

இப்பகுதியில் தொடர்ந்து வணிகக் கப்பல்கள் குறிவைக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. இது அங்கு நிலவி வரும் போரின் நேரடி விளைவாகும்.

சர்வதேச கடல்வழிப் பாதைகளில் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்.

பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com