ஓமன்: உரிய சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி உயிரிழப்பு.. கப்பலில் அழுகும் சூழலில் உடல் வைக்கப்பட்டுள்ள அவலம்

சக ஊழியர்கள் குடிநீர் பாட்டில்களை குளிர்வித்து உடலின் மீது அடுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது.
ஓமன்: உரிய சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி உயிரிழப்பு.. கப்பலில் அழுகும் சூழலில் உடல் வைக்கப்பட்டுள்ள அவலம்
Published on

ஓமன் நாட்டின் Duqm துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாந்த் என்ற 35 வயது மாலுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையாகி வருகிறது.

Duqm துறைமுகத்தில் நாகூராமிட்டிருந்த எம்.டி செலஸ்டியல் கச்சா எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த அவருக்கு கடந்த ஜூன் 8 அன்று திடீரென கடுமையான வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மரணம்

எனினும், முறையான சிகிச்சை கிடைக்காததால் கடந்த ஜூன் 11 (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் அவர் கப்பலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நிஷாந்தின் மரணம் குறித்து இந்திய மாலுமிகள் சங்கம், கப்பல் நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளது.

துறைமுகக் கடற்பகுதியில் அவசர மருத்துவ உதவிக் கட்டணமாக வெறும் 10 ரியால் (சுமார் ரூ.2,500) செலுத்தியிருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் நிஷாந்திற்கு மருத்துவ விசா மற்றும் சிகிச்சை கிடைத்திருக்கும்.

ஆனால், கப்பல் உரிமையாளர்களின் அலட்சியத்தால் அது வழங்கப்படவில்லை. நிஷாந்த் இறந்து இரண்டு நாட்கள் கடந்தும் அவரது உடல் கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளது.

உடல்

கப்பலில் உடலைப் பாதுகாப்பதற்கான முறையான குளிர்சாதன வசதிகள் இல்லாததால், நிஷாந்தின் உடல் அழுகுவதை தடுப்பதற்காக அங்கிருந்த சக ஊழியர்கள் குடிநீர் பாட்டில்களை குளிர்வித்து உடலின் மீது அடுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது.

அவரது உடல் இன்னும் கப்பலிலேயே உள்ளதால் மற்ற 15க்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தூதரகம்

நிஷாந்தின் மறைவு குறித்து மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியத் தூதரகம் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது.

நிஷாந்தின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவித்துள்ளது.

3 இந்தியர்கள் பலி

ஏற்கனவே மற்றொரு வணிக கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது போதிய மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டதால் நிஷாந்த் உயிரிழந்திருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com