ஓமன்: இயந்திர கோளாறால் கடலில் மூழ்கிய இந்திய கப்பல் - 14 இந்திய மாலுமிகளின் உயிர் காத்த அமெரிக்க ராணுவம்

14 இந்திய மாலுமிகளும் மீட்கப்பட்டதை மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

இன்று (ஞாயிறு) அதிகாலை ஓமன் கடற்பகுதியில் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்துகொணிடிருந்த 'விராட் 1' என்ற வணிகக் கப்பலில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இயந்திரம் செயலிழந்த நிலையில் கப்பலுக்குள் கடல் நீர் வேகமாக புகத் தொடங்கியது. இதனால் கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது.

ஆபத்தை உணர்ந்த மாலுமிகள் உடனடியாகக் கப்பலை விட்டு வெளியே குதித்தனர்.

மீட்பு

கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதை அறிந்த அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படை தங்கள் விமானம் மூலம் அவர்களுக்கு உயிர் காக்கும் படகுகளை வீசியது.

மேலும் மற்ற கப்பல்களுக்கு அவசர சமிஞை அனுப்பியது. அப்போது ஓமனின் சோஹார் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் மும்பை நோக்கி பயணித்து கொண்டிருந்த எம்வி ஜபல் அலி என்ற சரக்குக் கப்பல் உடனடியாக தனது பாதையை மாற்றி சம்பவ இடத்திற்கு வந்தது.

உயிர் காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்திய மாலுமிகளையும் அந்தச் சரக்குக் கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுத் தங்களின் கப்பலில் ஏற்றிக்கொண்டனர்.

தூதரகம்

14 இந்திய மாலுமிகளும் மீட்கப்பட்டதை மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.

அண்மையில் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் எம்.டி செட்டபெல்லோ என்ற வணிக கப்பலில் இருந்த 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அமெரிக்க ராணுவத்தின் உதவி வரவேற்பை பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com