

காத்மாண்டு:
நேபாள நாட்டின் ஆளும் கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான புதிய தலைவரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறுகிறது.
நேபாள காங்கிரஸின் 14 வது பொது மாநாடு வெள்ளிக்கிழமை தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரிகுடி மண்டபத்தில் தொடங்கியது. 134 பேர் கொண்ட மத்திய செயற்குழு மற்றும் கட்சித் தலைவர் உட்பட 13 நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நான்கு நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது
முன்னதாக இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தற்போதைய தலைவரும் பிரதமருமான ஷேர் பகதூர் டியூபா தம்மை மீண்டும் தலைவராக தேர்வு செய்யுமாறு கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்கட்சியின் மத்திய அலுவலகத்தில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடப்பட்டது.
அதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு 5 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 7 பேரும், இரண்டு பொதுச் செயலாளர்கள் பதவிக்கு 6 பேரும், எட்டு உதவிப் பொதுச் செயலாளர்கள் பதவிக்கு 19 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதனால் கட்சித் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள ஷேர் பகதூர் டியூபா கடும் போட்டியை சந்திக்க உள்ளார். 75 வயதான பிரதமர் டியூபாவிற்கு முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் மான் சிங், மத்தியக் குழு உறுப்பினர்கள் சேகர் கொய்ராலா, பிமலேந்திர நிதி மற்றும் கல்யாண் குருங் உட்பட நான்கு போட்டியாளர்கள் கடும் சவாலாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.
முன்னதாக சனிக்கிழமை டியூபா உள்பட ஐந்து மூத்த நிர்வாகிகளும் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,743 நேபாளி காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். ஷேர் பகதூர் டியூபா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தேர்தல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.