ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ மாகாணத்தில் இன்று 7.1 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாகக் கட்டிடங்கள் கடுமையாகக் குலுங்கின.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலில் 1 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிப்பைக் குறைக்க ஜப்பானிய அரசாங்கம் உடனடியாகச் செயல்பட்டு, தெற்கு கியூஷு தீவில் உள்ள குமமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி ஆகிய மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஜப்பானில் கடந்த ஜூன் 25 அன்றும் வடக்குப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக அதில் பெரும் சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் பெருங்கடலின் 'நெருப்பு வளையம்' எனப்படும் அதீத நிலஅதிர்வு மண்டலத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இப்பகுதியில் பசிபிக் தட்டு, பிலிப்பைன்ஸ் கடல் தட்டு, யூரேசிய தட்டு மற்றும் வட அமெரிக்க தட்டு ஆகிய நான்கு முக்கிய புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சந்திப்பில் இந்த நாடு அமைந்துள்ளது.
இந்தத் தட்டுகளின் தொடர்ச்சியான நகர்வுகளால் ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தமே இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணமாகிறது.
இதன் விளைவாக, உலகிலேயே மிக அதிகமான நிலநடுக்கங்களைச் சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. ஒட்டுமொத்த உலகில் பதிவாகும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் ஜப்பானில் மட்டுமே ஏற்படுகின்றன.
சுமார் 125 மில்லியன் மக்கள் வாழும் இந்தத் தீவுக் கூட்டத்தில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
ஜப்பானிய வரலாற்றில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான கடலடி நிலநடுக்கம் மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உருவான ராட்சதச் சுனாமி அலைகள் ஒட்டுமொத்த கடலோரப் பகுதிகளையும் துவம்சம் செய்தன.
இதில் சுமார் 18,500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், புகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாகச் சேதமடைந்து பெரும் அணு உலை விபத்து ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் 20 அன்று, நாட்டின் வடக்குப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததோடு, டோக்கியோவில் உள்ள பெரிய கட்டிடங்களும் அதிர்ந்தன.
இதைத் தொடர்ந்து, 8.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சிறப்பு எச்சரிக்கை விடுத்தனர்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணி இருப்பதாலேயே, தற்போதைய 7.1 ரிக்டர் நிலநடுக்கத்தின் போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.