குவைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் - இந்திய தூதர் பரமிதா திரிபாதி!

உயிரிழந்த இந்தியரின் உடலை பிரேத பரிசோதனை நிலையத்திலிருந்து விரைவாக மீட்க தூதரகம் நடவடிக்கை.
Ambassador Tripathi
Ambassador Tripathi
Published on

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரமான ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பல இந்தியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், குவைத்துக்கான இந்தியத் தூதர் பரமிதா திரிபாதி அவர்கள் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஆறுதல் கூறி உறுதியளித்துள்ளார்.

குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி வெளியிட்டுள்ள தகவலின்படி, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையம் (I) மீது ஈரானிய ட்ரோன்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் பயணியர் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், பல பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். தற்போது குவைத் ராணுவம் முழு விழிப்புடன் எல்லையை கண்காணித்து வருகிறது.

தாக்குதல் நடந்த உடனே இந்தியத் தூதர் பரமிதா திரிபாதி மத்திய பிரேத பரிசோதனை நிலையத்திற்கு நேரில் சென்று, குவைத் குற்றவியல் ஆதாரத் துறையின் பொது மேலாளர் பிரிகேடியர் அப்துல்ரஹீம் அல்-அவாதியை சந்தித்து, உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கான சட்டப்பூர்வ உதவிகளை துரிதப்படுத்தினார்.

இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

வளைகுடா பகுதியில் தொடர்ந்து வரும் மோதல்களில், அப்பாவி பொதுமக்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொது உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும், இத்தகைய வன்முறைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com