

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா. உச்சி மாநாட்டிற்காக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 193 ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் நெதன்யாகு, ஹக்கில் (Hague) உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியவர் என்று நான் நம்புகிறேன்.
அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி. கடந்த பல ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாக, இந்த கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு வெளிநாட்டு பிரதமரை கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் தனக்கு உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நியூயார்க் சட்டம் என்ன செய்ய அனுமதிக்கிறதோ, அதை நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.
மேலும் அமெரிக்காவில் மேயர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது, நெதன்யாகுவை கைது செய்வதாகவும் மம்தானி உறுதியளித்தார்.
இதையடுத்து அமெரிக்க மேயரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டானி டானன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேயராக தனது பொறுப்புகளில் கவனம் செலுத்தி, தனது நகரத்தில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு அலையை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவர் இஸ்ரேல் அரசை தாக்குவதன் மூலம், விரோதத்தை தூண்டி, தலைப்புச் செய்திகளை உருவாக்க முயற்சிக்கிறார். இதனால் எதுவும் மாறப்போவதில்லை.
இஸ்ரேல் பிரதமர் நியூயார்க்கிற்கு வந்து, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றி, இஸ்ரேலின் உண்மையையும் தன் குடிமக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உரிமையையும் உலகத்தின் முன் எடுத்துரைப்பார்.
மேலும் யாராவது கைது செய்யப்பட வேண்டும் என்றால், அது நியூயார் மேயர் உங்களை தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.