குவைத், ஜோர்டான், பஹ்ரைனில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் சரமாரி தாக்குதல்

ஒரே நேரத்தில் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், டஜன் கணக்கான டிரோன்களையும் அமெரிக்கத் தளங்களை நோக்கி ஏவியது
தாக்குதல்
தாக்குதல்
Published on

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக கூறி அந்நாடு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை எதிர்த்து கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின.

ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் உலகின் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.

இது அமெரிக்காவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைக்கு முன்வரச் செய்தது. இருப்பினும் முடிவை எட்டுவதில் இழுபறியே நீடித்தது.

இடையில் ஏப்ரல் 8 தாற்காலிக போர் நிறுத்தம் அமலான நிலையில் ஹெலிகாப்டர் மீதான தாக்குதலால் மீண்டும் போர் மூண்டுள்ளது.

வளைகுடா தாக்குதல்

இந்நிலையில் குவைத், ஜோர்டான், பஹ்ரைனில் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வளைகுடா பகுதியில் உள்ள சுமார் 21 அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது.

குவைத்தில் உள்ள 'அலி அல் சலிம்' அமெரிக்க விமானப்படைத் தளம், ஈரானின் டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.

இருப்பினும் குவைத் ராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தி, இலக்குகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளது.

இதேபோல ஜோர்டானின் கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் அல் அஸ்ராக் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. அங்கு விமான நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் 5ஆவது கடற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாட்டின் மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசியது. தலைநகர் மனாமாவில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விளக்கம்:

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அந்நாட்டு ஊடககங்களிடம் தெரிவிக்கையில், ஈரான் ஒரே நேரத்தில் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், டஜன் கணக்கான டிரோன்களையும் அமெரிக்கத் தளங்களை நோக்கி ஏவியது உண்மைதான்.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் நடுவானிலேயே இடைமறித்துச் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com