ஒரே வாரத்தில் 2வது முறையாக முடங்கிய இன்ஸ்டாகிராம் - என்ன காரணம்?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருக்கும் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாமல் பயனர்கள் அவதி.
MetaDown
Published on

மெட்டா நிறுவனத்தின் முன்னணி சமூக வலைதங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகள் தீடீரென நேற்று இரவு முடங்கின.

இதனால் உலகமெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்கள் நேரடியாக செய்திகளை அனுப்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட முடக்கத்தைத் தொடர்ந்து, ஒரே வாரத்தில் மெட்டா செயலிகள் சந்திக்கும் தொழில் நுட்பக்கோளாறு இது.

இரவு நேரத்தில் ஸ்தம்பித்த சேவைகள்:

புதன்கிழமை இரவு ஆசியப் பகுதிகளில் சுமார் 9 மணி அளவில் இந்தச் சேவை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட இதர உலக நாடுகளுக்கும் இந்த முடக்கம் பரவியது.

பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருக்கும் செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியவில்லை. பலருக்கு செய்திகள் 'சென்ட்' ஆகாமல் 'லோடிங்' என்றே காட்டியது.

மேலும், சில பயனர்களுக்கு கணக்கில் 'லாக்-இன்' செய்வதிலும், புதிய போஸ்டுகளைப் பதிவிடுவதிலும் கடுமையான சிக்கல்கள் நீடித்தன.

குவிந்த புகார்கள்:

இணையதளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பிரபல 'டவுடன்டெக்டர்' வளைதளத்தில், இன்ஸ்டாகிராம் முடங்கியது குறித்து குறுகிய நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான புகார்கள் பதிவாகின.

இன்ஸ்டாகிராமில் தான் மிக அதிகமான பாதிப்புகள் பதிவாகின என்றாலும், மெட்டாவின் மற்ற செயலிகளான ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சரிலும் சில நூறு பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியவில்லை என்று புகார்களைப் பதிவு செய்தனர்.

காரணம் என்ன?

மெட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த மெசேஜிங் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏதேனும் பெரிய தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இந்த மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக இணைய வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நள்ளிரவில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பின.

இருப்பினும், இந்தத் தொடர் முடக்கங்களுக்கான அதிகாரப்பூர்வ காரணம் என்ன என்பதைப் பற்றி மெட்டா நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com