video-ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடிக்கு 'வந்தே மாதரம்' பாடி உற்சாக வரவேற்பு!

ஸ்லோவாக்கியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
Enthusiastic Welcome for PM Modi in Slovakia with 'Vande Mataram' Song
Published on

ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்லோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகை தந்தபோது, ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்கள் குழுவினர் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை மிகத் துல்லியமான உச்சரிப்புடன் பாடி அவரை வரவேற்றனர். ஸ்லோவாக்கிய நாட்டு மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் இந்தியப் பாடலைப் பாடிய இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

முன்னதாக, ஹோட்டல் வளாகத்தில் பிரதமர் மோடியை ஸ்லோவாக்கியாவின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சர் ஜுராஜ் பிளானர் நேரில் வரவேற்றார். அந்நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி, விருந்தோம்பல் மற்றும் மரியாதையின் அடையாளமாக 'ரொட்டி மற்றும் உப்பு' வழங்கி பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் ஸ்லோவாக்கியா சுதந்திர நாடாக உருவானதற்குப் பிறகு, அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இதனால், இந்த இருதரப்பு சந்திப்பு இரு நாடுகளின் உறவிலும் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

நாளை வரை நடைபெறும் இந்த 2 நாள் பயணத்தில், பிரதமர் மோடி ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி மற்றும் ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல், வாகன உற்பத்தி மற்றும் ரயில்வே கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் பிரான்சின் எவியான் நகரில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸ் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com