கனடாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த காதலன் கைது!

கொலை நடந்த உடனே ஹிமான்ஷின் காதலன் போலீசில் சிக்காமல் தப்பி ஓடி தலைமறைவானார்.
Canada Crime
Crime
Published on

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 மாதங்களாக சர்வதேச அளவில் தலைமறைவாக இருந்த அவரது காதலன் அப்துல் கபூரியை டொராண்டோ போலீசார் அதிரடியாகக் கைது செய்து கனடாவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்தியப் பெண் பிணமாக மீட்பு:

கனடா டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (வயது 30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார்.

போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை நெருங்கிய இணையரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை என்று போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.

காதலன் மீது கொலைக் குற்றச்சாட்டு:

இந்தக் கொலை வழக்கில் ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதன்மைக் குற்றவாளியாக முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், கொலை நடந்த உடனே அவர் போலீசில் சிக்காமல் தப்பி ஓடி தலைமறைவானார்.

புகைப்படம் வெளியீடு மற்றும் தேடுதல் வேட்டை:

தலைமறைவான அப்துல் கபூரியை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அவசரமாக அவரது புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட டொராண்டோ போலீசார், குற்றவாளி பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

7 மாதங்களுக்குப் பின் கைது:

இந்த நிலையில் தலை மறைவான 7 மாதங்களுக்கு பிறகு அப்துல் கபூரியை போலீசார் கைது செய்தனர். வேறு நாட்டுக்கு தப்பி சென்ற அவரை போலீசார் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்தனர்.

அவர் எந்த நாட்டில் இருந்தார் என்பதைத் குறிப்பிடாமல், டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள், அவரை கனடாவுக்குக் கொண்டுவர தேசிய, சர்வதேச காவல் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com