இந்தியா - ஆப்கானிஸ்தான் தூதர்கள் சந்திப்பு: இருதரப்பு உறவை வலுப்படுத்த பெய்ஜிங்கில் முக்கிய ஆலோசனை!

இரு நாட்டு தூதர்களும் பெய்ஜிங்கில் சந்தித்து பல நூற்றாண்டு கால வரலாற்றை பற்றி கலந்துரையாடல்.
VikramDoraiswami, AsadullahKarimi
VikramDoraiswami, AsadullahKarimi
Published on

சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமியும், ஆப்கானிஸ்தான் தூதர் மவ்லவி அசதுல்லா பிலால் கரிமியும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று (03.06.2026) நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாட்டு மக்களுக்கு இடையே நிலவி வரும் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைத் தூதர்கள் நினைவு கூர்ந்தனர்.

மேலும், இரு தரப்புக்கும் பொதுவான நலன் சார்ந்த துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம், ஆப்கானிஸ்தான் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் தடுப்பூசி போடும் திட்டத்தை ஊக்கப்படுத்துவதற்காக, 20 டன் எடையுள்ள அத்தியாவசிய தடுப்பூசி மூலப்பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலநடுக்கப் பாதிப்புகளுக்குப் பிறகு, சமையலறை உபகரணங்கள், சுகாதாரக் கருவிகள், பிளாஸ்டிக் தாள்கள், தார்பாய்கள் மற்றும் தேவையான அவசர கால நிவாரணப் பொருட்களை இந்தியா கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அனுப்பி வைத்திருந்தது.

சமீபத்தில் ஐநா சபையில் பேசிய இந்தியப் பிரதிநிதி ஹரீஷ் பர்வதனேனி, காபூலில் உள்ள 'ஓமித் போதை ஒழிப்பு சிகிச்சை மருத்துவமனை' மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரமான தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஆயுத வன்முறைகளால் ஆப்கானிஸ்தானில் 750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய இந்தியா, மருத்துவமனை தாக்குதலில் மட்டும் 269 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியது.

"எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஆப்கானிஸ்தான் மக்களின் துயரங்களில் பங்கெடுத்து, அவர்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகளையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்க இந்தியா எப்போதும் உறுதியுடன் இருக்கும்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com