ஹார்முஸ் ஜலசந்தி மூடல்.. 2 கப்பல்கள் மீது தாக்குதல் - ஈரான் அதிரடி அறிவிப்பு

வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்.. 2 கப்பல்கள் மீது தாக்குதல் - ஈரான் அதிரடி அறிவிப்பு
Published on

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக கூறி அந்நாடு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

போர்

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை எதிர்த்து கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின.

ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் உலகின் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.

இது அமெரிக்காவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைக்கு முன்வரச் செய்தது. இருப்பினும் முடிவை எட்டுவதில் இழுபறியே நீடித்தது.

இடையில் ஏப்ரல் 8 தாற்காலிக போர் நிறுத்தம் அமலான நிலையில் ஹெலிகாப்டர் மீதான தாக்குதலால் மீண்டும் போர் மூண்டுள்ளது.

நேற்று பஹ்ரைன், ஜோர்டான், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து வருகிறது.

ஹார்முஸ்

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இந்த கடல்வழிப் பாதை இனி அனைத்து விதமான கப்பல் போக்குவரத்துக்கும் முழுமையாக மூடப்படுகிறது என்றும் தங்கள் உத்தரவை மீறி ஜலசந்தியை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு கப்பலும் எதிரிக்கு ஒத்துழைப்பதாகக் கருதப்பட்டு தாக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஈரானால் தாக்கப்பட்ட அந்த இரண்டு கப்பல்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை, அவற்றின் பெயர் என்ன மற்றும் அதில் உள்ள மாலுமிகளின் நிலை குறித்து தற்போதைக்கு எந்த விவரமும் வெளியாகவில்லை.

மறுபுறம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது என்பதை அமெரிக்கா தரப்பு மறுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com