எகிப்து துறைமுகத்தில் டிரோன் தாக்குதல்.. பின்னணியில் ஈரான்?

இந்த தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று எகிப்து பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது
Egypt DroneAttack
Published on

எகிப்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான டாமியெட்டா துறைமுகம் மீது நடத்தப்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதலால் சர்வதேச கடல்சார் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தத் தாக்குதலில் அமெரிக்க மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இரு கப்பல்களில் பற்றிய தீ:

டாமியெட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான திரவ இயற்கை எரிவாயு சேமிப்புக் கப்பல் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொரு கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து இரு கப்பல்களிலும் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கப்பல்கள்:

தீ முற்றிலும் அணைக்கப்பட்டு நிலைமை சீரானதை அடுத்து, பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட இரண்டு கப்பல்களும் உடனடியாக டாமியெட்டா துறைமுகப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த விபத்து மற்றும் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித உடல்நலப் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று எகிப்து பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன?

கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டதற்கான தெளிவான காரணத்தையோ அல்லது இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் குறித்த விவரங்களையோ எகிப்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதனால் இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தற்போதைக்குத் தெரியவில்லை. அதே நேரத்தில், எகிப்து துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதைச் சர்வதேச கடல்சார் புலனாய்வு நிறுவனமான 'ஆம்ப்ரே' உறுதிப்படுத்தியுள்ளது.

இப்பிராந்தியத்தில் சமீபகாலமாக நடந்து வரும் பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது. இது குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்துப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com