எல்லையில் சீனா 'ஸ்டெல்த்' போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!

சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
J-20 Mighty Dragon
Published on

இந்திய-சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா தனது ஐந்தாம் தலைமுறை 'J-20 மைட்டி டிராகன்' ரக ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் நிலைநிறுத்தியுள்ளதாக செயற்கைக்கோள் படத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களின் ஆய்வின்படி, லடாக் எல்லைக்கு அருகிலுள்ள 'ஹோட்டான்' விமானப் படையில் 7 J-20 விமானங்களும், அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள தம்ஷுங் விமானப் படையில் 4 J-20 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டான் விமானத்தளம்:

இது இந்தியாவின் தவுலத் பெக் ஓல்டி தளத்திலிருந்து சுமார் 245 கி.மீ தொலைவிலும், லே பகுதியிலிருந்து 389 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தம்ஷுங் விமானத்தளம்:

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு வடமேற்கே சுமார் 344 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வான் பாதுகாப்பு் சவால்:

இந்தியாவிடம் தற்போது 5th Gen ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் எதுவும் இல்லை. இந்திய விமானப்படை ரஃபேல், சுகோய் (Su-30MKI), 'மிராஜ் 2000' மற்றும் 'மிஹ்-29' ஆகிய 4.5 தலைமுறை போர் விமானங்களையே முதன்மையாகச் நம்பியுள்ளது. ரேடாரில் எளிதில் சிக்காத சீனாவின் J-20 விமானங்கள் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய வான் பாதுகாப்பு உத்திகளில் பெரிய மாற்றத்தைக் கோருகிறது.

தொழில்நுட்ப சவால்கள்:

அதிக உயரமான திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால், விமான இன்ஜின்களின் உந்துவிசை குறைய வாய்ப்புள்ளது. எனினும், சீனா இரு வேறு உயர்ந்த தளங்களில் ஒரே நேரத்தில் J-20 விமானங்களை இயக்கிப் பார்ப்பது, அதன் தளவாட மேலாண்மை மற்றும் பராமரிப்புத் திறனைச் சோதித்துப் பார்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

தொழில்துறை வளர்ச்சி:

சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஏவுகணைப் பாதுகாப்பு:

எல்லையில் சீனாவின் வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட ரேடார் வலையமைப்புகளை எல்லைப் பகுதிகளில் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியா தனது சொந்த 5th Gen ஸ்டெல்த் விமானத் திட்டமான 'AMCA (Advanced Medium Combat Aircraft' தயாரிப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன்மாதிரி தயாரிப்புகள் வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகின்றன.

சீனாவின் இந்த நடவடிக்கை உடனடிப் போருக்கான அறிகுறி அல்ல என்றாலும், எல்லைப் பகுதியில் தொடர்ச்சியான கண்காணிப்பையும், வான்வழிப் பாதுகாப்பு ஆயத்தங்களையும் இந்தியா பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com