உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்- கப்பலில் 13 இந்திய மாலுமிகள் தவிப்பு

சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் உள்ளனர்.
Russia-ukraine attack
Published on

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கருங்கடலில் உள்ள உக்ரைன் துறை முகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

அதேபோல் கருங்கடல் பகுதியில் ரஷிய எல்லைக்குட்பட்ட கடலில் பயணித்த கப்பல் மீது நடந்த தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி பலியானார்.

இந்த நிலையில் உக்ரைன் துறைமுகத்தில் நடந்த தாக்குதல் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் சோர்னோ– மோர்ஸ்க் துறைமுகம் அருகே ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எம்.வி. அமீர்1 என்ற சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் உள்ளனர். அந்த கப்பல் அருகே தீவிர தாக்குதல்கள் நடைபெற்றன. இதனால் கப்பல் இருக்கும் பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. தாக்குதல்கள் காரணமாக கப்பலில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 15 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள்.

இதையடுத்து மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் கூறும்போது,"உக்ரைன் துறைமுகத்தில் கப்பலுக்கு மிக அருகில் தொடர்ச்சியாக டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

எந்த நேரத்திலும் கப்பல் நேரடியாகத் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு, கப்பல் உரிமையாளர்கள், கப்பல் பதிவு செய்யப்பட்ட நாட்டின் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உடனடியாகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை விரைவாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

மோதல் நடைபெறும் பகுதிகளில் இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. இதில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

இந்திய மாலுமிகள் உள்ள எம்.வி. அமீர்1 கப்பல் தொடர்பான விவகாரம் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறோம். கப்பலில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com