

வங்கதேச ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் தனது பதவியை இன்று அத்திரைடியாக ராஜினாமா செய்துள்ளார்.
ஏப்ரல் 2023இல் ஷஹாபுதீன் வங்கதேச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அங்கு ஷேக் ஹசீனாவின் ஆட்சி நடந்து வந்தது.
ஆகஸ்ட் 2024 இல் மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுடன் ஷஹாபுதீனுக்கு இருந்த நெருக்கம் காரணமாக அதன் பின் வந்த தற்காலிக பிரதமர் முகமது யூனுஸ் அரசுக்கும், கடந்த ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தாரிக் ரஹ்மான் அரசுக்கும் பிணக்கு இருந்து வந்தது.
இந்நிலையில் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஷஹாபுதின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளது விவாதப்பொருளாகி வருகிறது. தாரிக் ரஹ்மான் அரசின் அழுத்தத்தின் பேரிலேயே அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 2024 போராட்டங்களின்போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு போர் குற்ற தீர்பாயம் மரண தண்டனை விதித்திருந்தது.
2024 ஆகஸ்டில் இந்தியா தப்பி வந்த ஷேக் ஹசீனா தற்போதுவரை மோடி அரசின் அடைக்கலத்தில் இருந்து வருகிறார்.
அவரை நாடுகடத்த வங்கதேச அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அவருக்கு பிடிவாரண்ட்டும் போர் குற்ற தீர்பாயத்தால் பிறப்பிக்கப்பட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, அண்மையில் ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில், வரும் டிசம்பரில் தான் வங்கதேசம் திரும்பி சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஷஹாபுத்தீனின் ராஜினாமா வந்துள்ளது.
அண்மையில் அவர் ஹசீனாவை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதால் அவர் மீதான அரசின் அதிருப்தி அதிகரித்துள்ளதாக வங்கதேச ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அவருக்கு பதிலாக இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷஹாபுதின், 1971 வங்கதேச சுதந்திர போரில் பங்கேற்றவர் ஆவார். முன்னதாக நீதிபதியவனும் இருந்துள்ளார். முகமது யூனுஸ் அரசால் ஓரங்கட்டப்பட்ட ஷஹாபுதின் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றபோதே ராஜினாமா செய்ய திட்டமிட்டுருந்ததாக கூறப்படுகிறது.