

சுவீடன் நாடாளுமன்றம், அத்தை, மாமா பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதைத் தடை செய்யும் புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஜூலை 1 முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கௌரவ அடிப்படையிலான ஒடுக்குமுறை, கட்டாயத் திருமணம், மரபணுக் குறைபாடு உள்ளிட்டவற்றை தடுக்கும்நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது, உறவினர்களுக்கு இடையேயான திருமணத்தையும், மணமக்களில் ஒருவர் மற்றவரின் உடன்பிறப்புகளின் நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கும் திருமணத்தையும் தடைசெய்கிறது.
மீறி திருமணம் நடைபெற்றால் அந்த திருமணத்தை சட்டபூர்வமாக அரசு ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்வீடனுக்கு வெளியே நடைபெறும் திருமணங்களுக்கும் இந்த தடை பொறுந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளில் இந்தத் தடையை மீறி நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டு, அதன் அடிப்படையில் ஸ்வீடன் குடியுரிமை அல்லது "துணை விசா" பெற முயன்றால் அது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி நடக்கும் திருமணங்களுக்கே இந்த சட்டம் பொருந்தும் எனவும் அந்நாட்டு அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
நார்வேவை தொடர்ந்து ஸ்வீடனில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் இந்த விவகாரம் விவாதத்தில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுவீடனில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா தற்போது பேசுபொருளாகியுள்ளது.