

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்லாமியக் குடியரசை வழிநடத்திய கமேனி, பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் அலையில் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்திய போரின் காரணமாக நீண்டகாலம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான "பிரமாண்டமான" இறுதிச் சடங்கிற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிவித்தன.
நேரம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், "இறுதிச் சடங்குக்கு தயாராவதற்காக ஒரு சிறப்பு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு முகமைகள் தற்போது திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றன" என்று, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான தெஹ்ரான் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மொஹ்சென் மஹ்மூதி தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனியின் இறுதிசடங்கு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் உடல் வரும் ஜூலை 9ம் தேதி மஷ்ஹாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்குகள் ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை டெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.