

அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சான் ஜுவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பெல் 412 விமானம் பயன்படுத்தப்பட்டது.
"நமது மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பெற்றோம், அதில் ஏழு பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்," என்று சான் ஜுவான் ஆளுநர் மார்செலோ ஒர்ரெகோ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடிமை பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், நேற்று (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் தளத்துடனான தொடர்பை இழந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்தன.
அருகிலுள்ள லா ரியோஜா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுவதற்காக அது சென்று கொண்டிருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.