

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு பாராளுமன்ற மேல்-சபை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. மேல்-சபை எம்.பி. பதவிக்கு த.வெ.க. ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் மேலும் 14 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அரசியல் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். பிரதான எதிர்க்கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில் சுயேச்சை வேட்பாளர்கள் 14 பேரின் வேட்பு மனுக்கள் முன்மொழிவோர் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரவீன் சக்கரவர்த்தி மனு மட்டும் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி எம்.பி.ஆக தேர்வானார். தேர்தல் ஆணையம் இதனை முறைப்படி அறிவிக்க உள்ளது.