ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? தி.மு.க.வை விளாசிய மாணிக்கம் தாகூர்

ஆனாலும் பா.ஜனதா அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரே அணியாக இருக்கிறோம். ஆனால் கூட்டணியில் இல்லை என்பதற்காக ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்?
காங்கிரஸ் தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம்
காங்கிரஸ் தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம்
Published on

தமிழக காங்கிரஸ் சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ், த.வெ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் மாணவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கூட்டமும் வெற்றி விழா கூட்டம் போல் மாறியது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.க.வை கடுமையாக விளாசினார்.

இரட்டை நிலைப்பாடு

அவர் பேசும்போது, ‘நீட் தேர்வால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கூட எதிர்க்கட்சி தலைவர் செல்லவில்ைல. தர்மேந்திர பிரதான் செய்த தவறுகள்தான் அவரது பதவியை பறித்துள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கிறேன். டெல்லியில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது. ஆனால் முதல் 3 நாட்கள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கலந்து கொள்ளவில்லை. நேற்று வரை நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் ஏன் திடீரென்று ‘சைலண்ட்’ ஆனார்கள்? எங்களுக்கும், கம்யூனிஸ்டுக்கும் பிரச்சினை உண்டு.

ஆனாலும் பா.ஜனதா அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரே அணியாக இருக்கிறோம். ஆனால் கூட்டணியில் இல்லை என்பதற்காக ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? ராகுலை போலீசார் நடத்திய விதத்துக்கு நாடு முழுவதும் தலைவர்கள் கண்டித்தார்கள். ஆனால் அதற்கும் இந்த இரு கட்சிகளும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. நாங்கள் 6 கட்சிகள் ஒரே மேடையில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இனி நேர்மையான ஆட்சி தொடரும்’ என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன்

ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு எங்களிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சு. நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்கள் பேச்சு. அதை டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.

கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால்தான் சட்டப்படி நீட்டை ஒழிக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். இதை திசை திருப்பும் வகையில் சிலர் அரசியல் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள் புகுந்து புகழை திருட பார்த்ததையும் பார்த்தோம். நீட்டை ஒழிக்காமல் விடமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் வன்னியரசு

பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ்தான் முன்னெடுக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும். எங்கள் அடுத்த இலக்கு இந்தியா முழுவதும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்பதே முழக்கமாக இருக்கும்’ என்றார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

உலகில் பல நாடுகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஆட்சிகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொண்டதால் மோடி அரசு தப்பித்து கொண்டது. மாணவர்கள் போராட்டம் மோடி கூட்டத்தையும், இந்துத்துவார் அமைப்புகளையும் நடுங்க வைத்துள்ளது. எந்த கட்சியையும் சாராத மாணவர்கள், இளைஞர்கள் அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் சேர்ந்து இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள்’ என்றார்.

சு.வெங்கடேசன் எம்.பி.

மாணவர்கள் போராட்டத்தை பார்த்து பா.ஜனதா நடுங்கி போய் இருக்கிறது. ஆட்சி அதிகாரம், ஆர்.எஸ்.எஸ். நெட்வொர்க் என அனைத்தையும் கிழித்து எறிந்து டெல்லியில் திரண்ட கூட்டம் 29 நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள எழுச்சி புதிய சிந்தனை, புதிய தொழில் நுட்பத்துடன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது தொடரும்’ என்றார்.

நவாஸ்கனி எம்.பி.

அண்டை நாடுகளில் நடந்த இளைஞர்கள் எழுச்சியை கண்ேடாம். அதேபோல் இங்கும் அசைக்க முடியாததல்ல ஒன்றிய அரசு என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

முடிவில் அமைச்சர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.

தீப்பந்தம்

கூட்டம் முடிந்ததும் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் மாணவர் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் சென்றது. இதை மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் குலாம் அகமது மிர், காங்கிரஸ் நிர்வாகிகள் ரூபி மனோகரன், சிரஞ்சீவி, தணிகாசலம், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், இல.பாஸ்கர், தி.நகர் ஸ்ரீராம், எம்.எஸ்.திரவியம், கராத்தே ரவி, ஜெ.பாலமுருகன், வில்லி வாக்கம் சுரேஷ், பெருங்குடி செந்தில் குரு, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com