ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள நீர் நிலைகள் வரண்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் இரவில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து தென்னை வாழை மரங்கள் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் அங்குள்ள விவசாயிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் இவருக்கு சொந்தமான தென்னை தோப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தியது மேலும் அங்கிருந்த முள்வேலி கம்பிகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
தென்னை மரத்திற்கும் முள்வேலிக்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
ஒற்றை யானை கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக நூற்றுக்கணக்கான தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருவதால் இங்கு உள்ள விவசாயிகள் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் தோட்டத்தில் இருக்கும் தண்ணீர் பைப்புகள் முள்வேலிகளை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.
உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் வனப்பகுதியை ஒட்டி கிராமத்துக்குள் யானைகள் வராத அளவிற்கு பெரிய அகழிகளை தோண்ட வேண்டும்.
பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருப்பது போன்று ரயில்வே இரும்பு தண்டவாள வேலைகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும் இவ்வாறு அமைத்தால் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும் என்றனர்.