

மதுரை:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிப் பாளையத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் ஆத்திரம் அடைந்த சிலர் ஆணவ படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக சேலம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (35), அருண் (22), குமார் என்ற சிவகுமார் (36), சங்கர் (24), அருள்செந்தில் (35), செல்வகுமார் (43), தங்கதுரை (31), சதீஷ்குமார் (26), ரகு என்ற ஸ்ரீதர் (21), ரஞ்சித் (22), செல்வராஜ் (32), சந்திரசேகரன் (44), பிரபு (34), கிரிதர் (23), சுரேஷ் (37), அமுதரசு (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு முதலில் நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது கோகுல்ராஜ் தாயார் சித்ரா வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை வன் கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த 5-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்பு உடையதாக யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதீஷ்குமார், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்றும், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாகவும் அறிவித்தது.
இதனை தொடர்ந்து சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு சாகும் வரை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து யுவராஜ் உள்பட குற்றவாளிகள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் யுவராஜை கோவை ஜெயிலுக்கு மாற்றுவது என்று மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி அவர் போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.