

வாலிபர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை வருகை தர உள்ளார். இதனால் திருவண்ணாமலை மாநகர் மற்றும் கோவில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற வாலிபர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தனர். மேலும் சாமி சன்னதி முன்பு சந்தேகப்படும் படியாக நின்றனர். கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபர்கள் மீது சந்தேகம் அடைந்தனர்.
வாலிபர்கள் அருகே சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபர்களை சோதனை செய்தனர்.
அவர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது. பின்னர் அந்த கேமரா பொருத்திய கண் கண்ணாடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.