தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்

போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
Arunachalam
Published on

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் திடீரென உயிரிழந்தார்.

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.

உறவினர்கள் மறியல்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர். அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் தூத்துக்குடி- நெல்லை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் அருணாச்சலத்தின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-நெல்லை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் போலீசார் தந்தை- மகனை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com