பாவு, நூல் விநியோகம் நிறுத்தம்: திருப்பூர்-கோவையில் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பு

சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர்.துணிக்கான விலை நிர்ணயம் செய்ய முடியாததால், கூலி பிரச்சினை நீடிக்கிறது.
ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு, நூல் வழங்காததால் பல்லடத்தில் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளதை காணலாம்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு, நூல் வழங்காததால் பல்லடத்தில் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளதை காணலாம்.
Published on

பல்லடம்:

திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் சீரற்ற பஞ்சு விலை உயர்வு காரணமாக இன்று முதல் 2 வார காலத்திற்கு பாவு நூல் விநியோகத்தை நிறுத்தி வைக்க உள்ளதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

அதன்படி இன்று முதல் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் விசைத்தறி தொழிலை சார்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள் 2வாரம் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தினசரி ரூ.100 கோடி காடாத்துணி உற்பத்தி என 2 வாரத்திற்கு ரூ.1400 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறுகையில்,

சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர். நிலையற்ற நூல் விலை காரணமாக துணியின் விலை நிர்ணயம் செய்ய முடியாத காரணத்தினால் துணி வர்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது.

மேலும் தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் மற்றும் போட்டி சந்தை மாநிலங்களை விட உயர்வாக உள்ள காரணத்தினால் துணி விலை அடக்கம் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த துணிகளை வாங்க வர்த்தகர்கள் யாரும் முன் வரவில்லை. எனவே இன்று முதல் 2 வார காலத்துக்கு முற்றிலுமாக விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் வினியோகத்தை நிறுத்தி ஜவுளி உற்பத்தியை குறைப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

விசைத்தறியாளர்கள் சிலர் கூறுகையில், பஞ்சு நூல் விலை சீராகாததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் தருவதில்லை. துணிக்கான விலை நிர்ணயம் செய்ய முடியாததால், கூலி பிரச்சினை நீடிக்கிறது. பாதி நாட்கள் மட்டுமே தறிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே மின் கட்டண உயர்வு பாதிப்பு குறித்து அரசிடம் முறை யிட்டுள்ளோம். அரசின் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம் .

பாவு, நூல் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பாவு, நூல் விநியோகம் செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com