சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்: துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்!

வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.
ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.
Published on

நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த 21 கி.மீ. நீளமுள்ள திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 தளங்களைக் கொண்டுள்ளது.

6 வழிச்சாலை

மேல்தளம் துறைமுக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் 6 வழிச்சாலை. இது துறைமுகம் வரை தொடர்கிறது. கீழ்த்தளம் சாதாரண உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் 4 வழிச்சாலை.

மதுரவாயல் முதல் கோயம்பேடு வரை ஒற்றைத் தளம் மட்டுமே இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதல் அடுக்கில் மொத்தம் 13 இடங்களில் சாய்தளங்கள் (7 ஏறும் வழிகள் மற்றும் 6 இறங்கும் வழிகள்) அமைக்கப்படுகின்றன.

கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்
ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்

போக்குவரத்து நெரிசல் குறையும்

இந்த மேம்பாலம் சென்னை துறைமுகம் கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாக பயணித்து, கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது. துறைமுகம் முதல் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி ஈரடுக்கு பாலமாக அமைகிறது.

கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் ஒற்றை அடுக்கு பாலமாகத் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மேல் தளத்தில் நேரடியாகச் செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.

நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.

செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

கார்டர்கள் பொருத்தும் பணி

கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் சற்றே தாமதமானது. தற்போது, தினமும் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரங்கள் தீவிரமாகப் பணிகள் நடந்து வந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு 16 மணி நேரமாக உயர்த்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.

சென்னைக்கு வரப்பிரசாதம்

வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் திறன் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஈரடுக்கு மேம்பால சாலை சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com