தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் பெண் டாக்டர் கைது

டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர்.ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது.
தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் பெண் டாக்டர் கைது
Published on

சென்னை:

சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் சரவணன் (வயது 46). கடந்த 20-ந் தேதி இவரை வீடு புகுந்து ஒரு கும்பல் காரில் கடத்தியது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.

மேலும் தொழில் அதிபரை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவை சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் அரவிந்த்குரு (23), திருப்பூர் கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை அஜய் (24), விஜயபாண்டி (25) என 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறி இருந்தது. கடத்தல் கும்பலிடம் இருந்து பொம்மை துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் மிரட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்தது தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பதும், அவர் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்த வழக்கில் போலீசார் தேடுவதையறிந்து அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஆரோக்கியராஜும் இவர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார்.

இதற்கிடையே டாக்டர் அமிர்தாவுக்கும், சரவணனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏற்பட்டு பகை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து சரவணனை கடத்தி பணத்தை பெற அவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அப்போது டாக்டர் அமிர்தா, 'நான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் சரவணன் உடனே வந்துவிடுவார். பின்னர் அவரை இங்குள்ள அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பணத்தை வாங்கி விடலாம்' என்று கூறியிருக்கிறார்.

அதன்படி சம்பவத்தன்று ஆரோக்கியராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சரவணன் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்கவே, பொம்மை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் டாக்டர் அமிர்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com