திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- பயணிகள் எதிர்பார்ப்பு

பஸ் நிலைய பணி இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 4-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது.
திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்
திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்
Published on

திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடும் நெரிசல்

திருவள்ளூர் ராஜாஜி சாலையில் பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும். மேலும் பஸ் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால் பஸ்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரவும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பஸ்நிலைய பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம்

இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்றது.

பஸ் நிலைய பணி இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 4-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது. பின்னர் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து மார்ச் 30-ந் தேதி முதல் அனைத்து பஸ்களும் வேடங்கிநல்லுார் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தாமதம்

ஆனால் இன்னும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. கட்டுமான பணிகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் முன் சாலையை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

இதன் காரணமாக புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதிய பஸ்நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ்நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com