

வார இறுதி நாட்களையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை), 13-ந் தேதி (சனிக்கிழமை), 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 605 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கன்னி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
சென்னை மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த 3 நாட்களில் சொந்த ஊர் செல்வதற்காக இதுவரை 18 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.